நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி


நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 4 Oct 2019 11:00 PM GMT (Updated: 4 Oct 2019 8:00 PM GMT)

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பவானிசாகர்,

சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் பசுமைத்தாயகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து காலநிலை அவசர பிரகடனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். இணைச்செயலர் மலர்செல்வி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இன்றைய சூழ்நிலையில் புவி வெப்பமயமாதல், நீர்நிலைகளை பாதுகாத்தல், மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமதேனு கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் செங்கோட்டையன், கண்ணன் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுக்கடைகளை மூடவேண்டும் என்பது எங்கள் கொள்கை. ஆந்திராவில் தனியார் நடத்திக்கொண்டிருந்த மதுக்கடைகளை அரசே எடுத்து நடத்துவதோடு அதில் 20 சதவீத கடைகளை மூட ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதோடு படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

சிறுவயது பிள்ளைகள் மது அருந்துகின்ற சூழல் தற்போது உள்ளது. இந்த நிலையை மாற்ற உச்சநீதிமன்றம் சென்று தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளையும் நாடு முழுவதும் 9 ஆயிரம் மதுக்கடைகளையும் மூடியுள்ளோம். நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். ஆள்மாறாட்டம் செய்த நபர்களை கண்டறிந்து விசாரணை மேற்கொள்வதோடு இதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story