மராட்டிய சட்டசபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் முடிந்தது 5 ஆயிரத்து 537 பேர் மனு செய்தனர்


மராட்டிய சட்டசபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் முடிந்தது 5 ஆயிரத்து 537 பேர் மனு செய்தனர்
x
தினத்தந்தி 4 Oct 2019 11:30 PM GMT (Updated: 4 Oct 2019 8:05 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலில் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. மொத்தம் 5ஆயிரத்து 537 பேர் மனு தாக்கல் செய்தனர்.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலில் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. மொத்தம் 5ஆயிரத்து 537 பேர் மனு தாக்கல் செய்தனர்.

சட்டசபை தேர்தல்

மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன.

இதுதவிர ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி மற்றும் ஓவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சியும் தனித்தனியாக தேர்தல் களத்தில் உள்ளன.

சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனர்.

முதல்-மந்திரி வேட்புமனு

வேட்பு மனுவை தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் நேற்று போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன் காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் பரபரப்பாக காணப்பட்டன. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது மத்திய மந்திரி நிதின் கட்காரி, மாநில பா.ஜனதா தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் உடன் இருந்தனர்.

நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை எதிர்த்து காங்கிரசின் ஆஷிஸ் தேஷ்முக் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் பாராமதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரும் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அஜித் பவாரை எதிர்த்து இந்த தொகுதியில் பா.ஜனதாவின் கோபிச்சந்த் பாடல்கர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5,537 பேர் மனு

இதேபோல ஷீரடியில் மந்திரி ராதா கிருஷ்ண விகே பாட்டீல், பல்லர்பூரில் மந்திரி சுதீர் முங்கண்டிவார், எவ்லாவில் சகன்புஜ்பால் ஆகியோர் வேட்பு மனு செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், மொத்தம் சுமார் 5 ஆயிரத்து 537 பேர் மனு செய்ததாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

Next Story