மணப்பாறை அருகே, தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் நகை பறிப்பு


மணப்பாறை அருகே, தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2019 3:30 AM IST (Updated: 5 Oct 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் நகை பறித்த 2 ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ரூபெல்லா ராணி(வயது50). இவர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த முத்தக்கவுண்டம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் பள்ளிக்கு தனது ஸ்கூட்டரில் வீட்டில் இருந்து சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். கீழபூசாரிப்பட்டி அருகே ஸ்கூட்டரில் சென்றபோது, அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் வேகமாக வந்து ஸ்கூட்டரை வழிமறித்து தலைமை ஆசிரியை ரூபெல்லா ராணி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன அவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் அவ்வழியாக வந்தவர்களிடம் நடந்ததை கூறினார். இதைத்தொடர்ந்து மணப்பாறை போலீசில் ரூபெல்லா ராணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்டும் ஆசாமிகள் பெரும்பாலும் ஹெல்மெட் அணிந்து வருவதுதான் வழக்கம். ஆனால், நேற்றைய தினம் தலைமை ஆசிரியையிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகள் ஹெல்மெட் அணியாமலேயே கைவரிசை காட்டி இருக்கிறார்கள். இதனால், போலீசாரிடம் தன்னால் கொள்ளையர்களை அடையாளம் காட்டமுடியும் என தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார். அவர் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து போலீசார், பழைய திருடர்களின் பட்டியலை சேகரித்து அவர்களின் புகைப்படங்களை காட்டி அடையாளம் காணும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story