மாவட்டத்தில் “25 லட்சத்து 67 ஆயிரத்து 808 வாக்காளர்கள்” கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் 25 லட்சத்து 67 ஆயிரத்து 808 வாக்காளர்கள் உள்ளதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஷில்பா வெளியிட்டார். மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, நகரபஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், உள்ளாட்சி வளர்ச்சி பிரிவு அதிகாரிகள் தண்டபாணி, முத்துஇளங்கோ ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக வாக்காளர் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி 26-ம், யூனியன் கவுன்சிலர் பதவி 266-ம், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி 425-ம், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி 3636-ம் ஆக மொத்தம் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் 4 ஆயிரத்து 353 பதவிகள் காலியாக உள்ளன.
இந்த பதவிக்கான தேர்தலுக்கு 2,411 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு வாக்கு பெட்டி முறையில் தேர்தல் நடத்தப்படும். இங்குள்ள வாக்காளர்கள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய 4 பேருக்கு சேர்ந்து 4 ஓட்டுப்போடவேண்டும்.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நெல்லை மாநகராட்சிக்கு ஒரு மேயர் பதவி, 55 வார்டு கவுன்சிலர் பதவி, 7 நகரசபை தலைவர் பதவி, 195 நகரசபை கவுன்சிலர் பதவி, 36 நகரபஞ்சாயத்து தலைவர் பதவி, 572 நகரபஞ்சாயத்து கவுன்சிலர் பதவி என மொத்தம் 866 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இந்த பதவிக்கான தேர்தலுக்கு 1,431 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படும். தேர்தலுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் கர்நாடகாவில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சத்து 67 ஆயிரத்து 808 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 12 லட்சத்து 62 ஆயிரத்து 526 பேரும், பெண்கள் 13 லட்சத்து 5 ஆயிரத்து 190 பேரும், இதர பிரிவினர் 92 பேரும் உள்ளனர். இதில் ஊரக பகுதியில் மொத்தம் 13 லட்சத்து 57 ஆயிரத்து 156 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 67 ஆயிரத்து 814 பேர், பெண்கள் 6 லட்சத்து 89 ஆயிரத்து 301 பேர். இதர பிரிவினர் 41 பேர்.
நெல்லை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 141 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 94 ஆயிரத்து 766 பேர், பெண்கள் 2 லட்சத்து 2 ஆயிரத்து 339 பேர். இதர பிரிவினர் 36 பேர். மாவட்டத்தில் உள்ள 7 நகரசபை பகுதியில் மொத்தம் 3 லட்சத்து 28 ஆயிரத்து 679 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 966 பேர், பெண்கள் 1 லட்சத்து 66 ஆயிரத்து 707 பேர். இதர பிரிவினர் 6 பேர்.
மாவட்டத்தில் உள்ள 36 நகரபஞ்சாயத்து பகுதியில் மொத்தம் 4 லட்சத்து 84 ஆயிரத்து 832 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 37 ஆயிரத்து 980 பேர், பெண்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 843 பேர். இதர பிரிவினர் 9 பேர். வாக்காளர் பட்டியல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.
Related Tags :
Next Story