நெல்லை பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு


நெல்லை பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 4 Oct 2019 9:45 PM GMT (Updated: 4 Oct 2019 8:22 PM GMT)

நெல்லை பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் போலீஸ், போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

நெல்லை,

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78½ கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட உள்ளது. இதற்காக பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு உள்ளன. பஸ் நிலையத்தை சுற்றி உள்ள ரோட்டில் தற்காலிகமாக பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதனால் பஸ்நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சந்திப்புக்கு பஸ்கள், வாகனங்கள் நுழைவதை நிறுத்தி விட்டு, பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சிக்கு எதிரே உள்ள பொருட்காட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடமான வ.உ.சி. மணிமண்டபம் முன்பு உள்ள வளாகம் பஸ் நிலையமாக மாற்றப்பட்டது. அங்கு 5 பயணிகள் நிழற்குடைகள் மற்றும் புறக்காவல் நிலையம், கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பஸ்கள் வந்து செல்ல ஏதுவாக ரோடு அமைக் கும் பணி முடிவடைந்து விட்டது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தற்காலிக பஸ்நிலையம் அமைக் கும் பணி முடிவடைந்து விட்டது என்று கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானகுமார், அரசு போக்குவரத்து கழக மேலாளர் சங்கரநாராயணன், வணிக மேலாளர் சசிகுமார், உதவி பொறியாளர் ஜேக்கப் மற்றும் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேற்று தற்காலிக பஸ்நிலையத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது 4 பஸ்களை அங்கே இயக்கி, எப்படி பஸ்கள் வந்து திரும்பி செல்வது என்று ஆய்வு நடத்தப்பட்டது.

பஸ்நிலையத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லக்கூடிய டவுன் பஸ்கள் நிற்கும் இடம், அதில் பயணிகளுக்கான நிழற்குடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வு அறிக்கையை அதிகாரிகள் கலெக்டரிடம் வழங்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தற்காலிக பஸ் நிலையம் செயல்படத் தொடங்கும். அதன் பிறகு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வருவது முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story