கட்சிக்கு எதிரான நடவடிக்கை சஞ்சய் நிருபத்துக்கு காங்கிரஸ் மேலிடம் எச்சரிக்கை
கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சஞ்சய் நிருபத்துக்கு காங்கிரஸ் மேலிடம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மும்பை,
கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சஞ்சய் நிருபத்துக்கு காங்கிரஸ் மேலிடம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சஞ்சய் நிருபம் அதிருப்தி
மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டசபைகளுக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மராட்டியத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா, சிவசேனா கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மாநிலத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் காங்கிரஸ் கட்சியில் திடீரென உள்கட்சி பூசல் வெடித்து உள்ளது.
மும்பை காங்கிரசின் முன்னாள் தலைவரான சஞ்சய் நிருபம் தனது ஆதரவாளர்கள் 4 பேருக்கு சட்டசபை தேர்தலில் சீட் கொடுக்க பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால் அவர் பரிந்துரை செய்தவர்களில் ஒருவருக்கு கூட காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்கவில்லை.
இதனால் காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்திக்குள்ளான சஞ்சய் நிருபம் தன்னை காங்கிரஸ் தலைமை ஓரங்கட்டுவதாகவும், சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன் என போ ர்க் கொடி தூக்கினார். சஞ்சய் நிருபத்தின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் மராட்டிய சட்டசபை தேர்தல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியது.
அசோக் தன்வார்
இதேபோல அரியானாவில் தேர்தல் சீட் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக அந்த மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் தேர்தல் குழுவில் இருந்து விலகினார்.
மேலும் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் சஞ்சய் நிருபம், அசோக் தன்வார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியதாவது:-
கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்
கட்சியில் உயர் பதவிகளை வகித்த இரண்டு தலைவர்களும் (சஞ்சய் நிருபம், அசோக் தன்வார்) தங்களது கருத்துக்கள் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கு உதவி விட கூடாது என்பதை உணர வேண்டும்.
அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் சீட்டுகள் வழங்கியதில் உள்ள வேறுபாடுகள் தொடர்பாக இரண்டு தலைவர்களும் கோபத்தில் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இருவரும் முதிர்ச்சி மற்றும் புத்திசாலிதனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி சஞ்சய் நிருபம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலின் போதும் தேர்தல் டிக்கெட் வழங்கியதில் எனது கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. கட்சியில் எனக்கு மரியாதை இல்லாமல் இருந்த போதிலும் நான் மும்பை காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகள் பணியாற்றினேன், என்றார்.
Related Tags :
Next Story