பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்


பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 5 Oct 2019 3:45 AM IST (Updated: 5 Oct 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், கல்லூரி முதல்வர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் 60 சதவீதத்திற்கு மேல் மழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தினமும் காலை பிரார்த்தனையின்போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலை வளாகங்களில் தினமும் சுற்றிப்பார்த்து, மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடங்களை பார்வையிட்டு சுத்தம் செய்ய வேண்டும். டெங்கு கொசு பகலில்தான் கடிக்கும். பகலில் அதிக நேரம் மாணவ, மாணவிகள் பள்ளியில்தான் இருப்பார்கள். எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு விடுப்பு எடுத்துள்ள குழந்தைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். மழைக்காலங்களில் கட்டிடங்களில் நீர் கசிவுகள் உள்ளதா? என்றும் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

பருவமழையின் போது கனமழை பெய்து வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், மின்தடை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மருத்துவமனைகளில் மின்தடை ஏற்பட்டாலும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜெனரேட்டர்களை மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை போதிய அளவிற்கு இருப்பு வைக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவது ஆய்வின்போது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். வாழை மரத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசு உற்பத்தி கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, நலப்பணிகள் இணை இயக்குனர் பரிதா செரின், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், கல்லூரி முதல்வர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story