மார்த்தாண்டத்தில் பரபரப்பு: பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பழுது; விற்பனை நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


மார்த்தாண்டத்தில் பரபரப்பு: பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பழுது; விற்பனை நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 4 Oct 2019 8:25 PM GMT)

மார்த்தாண்டத்தில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பழுதானதால், பெட்ரோல் விற்பனை நிலையத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழித்துறை, 

மார்த்தாண்டம் சந்திப்பு அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நேற்று ஏராளமானவர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து பெட்ரோல் நிரப்பினார்கள். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அனைத்து வாகனங்களும் இயங்காமல் பழுதாகி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் அங்கு வந்தார். அவர் கூடியிருந்தவர்களிடம் பேசும் போது, “பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் எதற்காக பழுதாகின என்பது தெரியவில்லை. தற்போது பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கிறது. அதோடு மழை காலம் என்பதால் லாரிகளில் பெட்ரோல் கொண்டு வந்து நிரப்பும் போது அதில் மழைநீர் கலந்திருக்கலாம். எனவே பழுதான வாகனங்களுக்கு உரிய செலவு தொகையை வழங்கி விடுகிறோம்“ என்றார்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து அங்கு ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.


Next Story