பிரேக் பிடிக்காததால் சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது பஸ் மோதியது; போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயம் டிரைவர்-கண்டக்டருக்கு வலைவீச்சு


பிரேக் பிடிக்காததால் சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது பஸ் மோதியது; போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயம் டிரைவர்-கண்டக்டருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

நசரத்பேட்டையில் பிரேக் பிடிக்காததால் சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மாநகர பஸ் மோதியதில், போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக தப்பி ஓடிய டிரைவர், கண்டக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர பஸ் ஒன்று நேற்று வந்தது. பூந்தமல்லி-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நசரத்பேட்டை சிக்னல் அருகே வந்த போது, பஸ்சின் பிரேக் திடீரென பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, அப்பகுதியில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. மேலும் சாலையில் நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் சேதம் அடைந்தது.

இதனால், அந்த வாகனங்களில் வந்த 4 பேர் மற்றும் பணி செய்து கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தை கண்டதும், அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து, காயம் அடைந்தவர்களை அங்கிருந்த பயணிகள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்துக்காரணமான அரசு பஸ்சை போக்குவரத்து போலீசார் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். மேலும், தப்பியோடிய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story