பா.ஜனதா இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு முக்தாய்நகரில் ஏக்நாத் கட்சே மகள் போட்டி மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு


பா.ஜனதா இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு முக்தாய்நகரில் ஏக்நாத் கட்சே மகள் போட்டி மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:30 AM IST (Updated: 5 Oct 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் முக்தாய்நகரில் ஏக்நாத் கட்சேயின் மகள் போட்டியிடுகிறார்.

மும்பை, 

பா.ஜனதா வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் முக்தாய்நகரில் ஏக்நாத் கட்சேயின் மகள் போட்டியிடுகிறார். வினோத் தாவ்டே, பிரகாஷ் மேத்தா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல்

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் பா.ஜனதா ஏற்கனவே 3 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. அந்த பட்டியலில் உயர் கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே, முன்னாள் வீட்டு வசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இறுதியில் வெளியாகும் வேட்பாளர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பா.ஜனதா தலைமை மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் இதுவரை அறிவிக்கப்படாத 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

ஏக்நாத் கட்சே மகள்

இதிலும் மூத்த தலைவர்கள் வினோத் தாவ்டே, பிரகாஷ் மேத்தா, ஏக்நாத் கட்சே ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இது அவர்களின் ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் முக்தாய்நகரில் ஏக்நாத் கட்சேவுக்கு பதிலாக அவரது மகள் ரோகிணி கட்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வினோத் தாவ்டேயின் போரிவிலி தொகுதியில் சுனில் ரானேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரகாஷ் மேத்தாவின் காட்கோபர் கிழக்கு தொகுதியில் மும்பை மாநகராட்சியின் பணக்கார கவுன்சிலரான பரக் ஷா போட்டியிடுகிறார்.

இதேபோல கொலாபா தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. ராஜ் புரோகித்துக்கு பதிலாக புதியவரான ராகுல் நர்வேக்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு நெருக்கமானவரான மாநில மந்திரி சி.பவன்குலேவுக்கு கடோல் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் சரன்சிங் தாக்கூர் போட்டியிடுகிறார்.

இதுதவிர தும்சரில் பிரதீப் படலேவும், நாசிக் கிழக்கில் ராகுல் திகேலேவும் போட்டியிடுகின்றனர்.

Next Story