ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் முதியோர்களிடம் மோசடியில் ஈடுபட்ட பலே என்ஜினீயர் சிக்கினார்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்


ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் முதியோர்களிடம் மோசடியில் ஈடுபட்ட பலே என்ஜினீயர் சிக்கினார்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 5 Oct 2019 12:00 AM GMT (Updated: 4 Oct 2019 9:05 PM GMT)

ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் முதியோர்களுக்கு பணம் எடுத்துக்கொடுப்பது போல நடித்து நூதன மோசடியில் ஈடுபட்ட காரைக்குடி என்ஜினீயர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகர் பகுதியில் நேற்று முன் தினம் குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவு தலைமை காவலர்கள் பட்டாபிராமன், வளத்தீஸ்வரன், ராஜகோபால், பாண்டியராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் சாலைத்தெரு பாரத ஸ்டேட் வங்கி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்ததை கண்டனர். அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததோடு வக்கீல் என்று மிரட்டி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரின் அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது அது போலி என்பது தெரிந்தது. இதனால் சந்தேகம் வலுத்த நிலையில் அவரை சோதனையிட்டபோது ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரி நெசவாளர் காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கோபி(வயது 25) என்பதும், என்ஜினீயரிங் முடித்தவர் என்பதும் தெரிந்தது. அவரை அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

கோபி, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் முதியோர்களை குறி வைத்து பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்ததுடன், மீதம் உள்ள தொகையை பார்த்து வைத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொள்பவர்கள் அதனை எண்ணி சரிபார்க்கும் நேரத்தில் கோபி, தான் வைத்துள்ள போலி ஏ.டி.எம். கார்டினை அவர்களிடம் கொடுத்து, அவர்களின் ஏ.டி.எம். கார்டை நைசாக வைத்துக் கொள்வாராம்.

அவரது அக்கறையான பேச்சை நம்பி, அந்த நபர்கள் சென்றதும் தான் கைப்பற்றி வைத்துள்ள ஏ.டி.எம்.கார்டினை போட்டு ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்து மீதம் உள்ள பணத்தினை கண் இமைக்கும் நேரத்தில் எடுத்து விடுவாராம். சம்பந்தபட்டவர்கள் சுதாரித்து கார்டை பிளாக் செய்யும் வரை பணம் எடுத்து வந்துள்ளார். இதனையே வழக்கமாக கொண்டு ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஸ்டேட் வங்கியின் மூலம்தான் பென்சன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்பதால் அதனை எடுக்க முதியவர்கள், விவசாயிகள் என வருவார்கள் என்பதால் அந்த வங்கி ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு மோசடி செய்யும் பணத்தினை வைத்து கோபி டிப்-டாப் உடை அணிந்து ஊர் ஊராக சென்று வாடகைக்கு அறை எடுத்து உல்லாசமாக பொழுதை கழித்து வந்துள்ளார். பார்ப்பதற்கு நல்லவர் போல உடை அணிந்து இருப்பதால் முதியவர்கள் நம்பிக்கையுடன் பணம் எடுத்து தரும்படி கூறுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். வாலிபர் கோபி பொறியியல் பட்டய படிப்பு படித்தவர் ஆவார்.

பயனில்லை என்று வீணாக போட்டுவிட்டு செல்லும் பழைய கார்டுகள்தான் கோபிக்கு மூலதனமாக இருந்து இந்த நூதன மோசடியை செய்ய வழிவகை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

கடந்த மார்ச் 28-ந்தேதி ஆர்.எஸ்.மங்கலம் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகனிடம்(46) ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கொடுப்பது போல நடித்து ரூ.20,000 மோசடி செய்துள்ளார். இதேபோல் போலீசாரின் விசாரணையில் கோபி ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம், பழனி, ஈரோடு, பவானி, ஓமலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் அளவில் பணம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோபியிடம் இருந்து பல ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story