வேதாரண்யம் அருகே, கைதான இலங்கை மீனவர்கள் 18 பேரும் சென்னை கோர்ட்டில் இன்று ஆஜர்


வேதாரண்யம் அருகே, கைதான இலங்கை மீனவர்கள் 18 பேரும் சென்னை கோர்ட்டில் இன்று ஆஜர்
x
தினத்தந்தி 5 Oct 2019 4:30 AM IST (Updated: 5 Oct 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான இலங்கை மீனவர்கள் 18 பேரும் சென்னை கோர்ட்டில் இன்று (சனிக்கிழமை) ஆஜர் படுத்தப்படுகிறார்கள்.

வேதாரண்யம், 

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு கடலோர காவல் படையினர் கடல் எல்லையில் இரவு, பகலாக ரோந்து பணிமேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கா‌‌ஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் மேலும் அதிகரித்துள்ளது. மேலும் மகாபலிபுரத்திற்கு இந்திய பிரதமரும், சீன பிரதமரும் வருகை தரவுள்ளதை முன்னிட்டு கடலோர காவல்படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் போலீசார், கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை மீனவர்கள் 18 பேர் 8 படகுகளில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

யாழ்பாணம் எழுவைதீவு மற்றும் பருத்தித்துறை, காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த 2-ந் தேதி அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றவர்கள் எல்லை தாண்டி இந்திய கடல் எல்லையில் வேதாரண்யம் அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படையினர் இலங்கை மீனவர்களை கைது செய்தனர்.

கைதான இலங்கை மீனவர்கள் ஜெய்வதனன்(வயது 25), நிசந்தகுமார்(35), நந்தகுமாரன்(32), அர்த்தநாத்(34), நிதர்சன்(18) வின்சன்(20), ஆண்ட்ராணி ஜவதாஸ்(52), ஆண்ட்ராணி அரியதா(22), மரியலனஸ்(32), மரிடிமஸ்(33), மரியசெல்வம்(22), மணிலாஸ்(36), வின்சாண்டி(52), ஆரணிதாஸ் (19), அல்போன்ஸ் ஆண்ட்ராணி(59), ஆண்டன்ரோபேட்(23), டாணியன்(18), சூட்சைசிந்து(22) ஆகிய 18 பேரையும் இந்திய கடலோர காவல்படையினர் காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு கொண்டு வந்து வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.

கைதான 18 பேரும் சென்னை எழும்பூர் மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் இன்று(சனிக்கிழமை) ஆஜர்படுத்தப்படுத்தப்பட உள்ளனர்.

Next Story