பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
திருமருகலில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
திருமருகல்,
திருமருகல் ஒன்றியத்தில் விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருமருகல் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி விவசாய சங்கத்தினர் நேற்று திருமருகல் பஸ் நிலையம் எதிரே ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் சங்கர், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் பிரபாகரன், கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விவசாய சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நாகை - நன்னிலம் மெயின் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story