திருத்துறைப்பூண்டி அருகே, பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தி.மு.க.வினர் சாலைமறியல்
திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி தி.மு.க.வினர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி,
கடந்த 2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் உடனடியாக விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டுமேடு கடைத்தெருவில் தி.மு.க.வினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் ஆடலரசன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வக்கீல் பாஸ்கர், ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில், ஒன்றிய துணை செயலாளர்கள் சேதுமுருகானந்தம், கவிதாநவநீதம், ஊராட்சி செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இதேகோரிக்கையை வலியுறுத்தி விளக்குடி கடைத்தெரு மற்றும் ஆலத்தம்பாடி கடைத்தெருவிலும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story