4,500 பேருக்கு ரூ.19 கோடி திருமண உதவித்தொகை - அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்
4,500 பேருக்கு ரூ.19 கோடி மதிப்பில் திருமண உதவித்தொகையை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு 4,500 பேருக்கு ரூ.19 கோடி மதிப்பிலான திருமண உதவித்தொகையையும், தலா 8 கிராம் தங்கத்தையும் வழங்கினார்.
மேலும் அவர், 2018-19-ம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த 1 லட்சத்து 40 ஆயிரத்து 352 விவசாயிகளுக்கு ரூ.270 கோடி இழப்பீட்டு தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 89 ஆயிரத்து 372 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள், தாய்மார்களுக்கு என்னென்ன நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தாரோ, அந்த திட்டங்கள் மட்டுமின்றி புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி புதிய சகாப்தத்தை ஏற்படுத்தினார்.
ஜெயலலிதா வழியில் நடக்கும் தமிழகஅரசு விவசாயிகளின் நலனில் அக்கறை எடுத்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பயிர்க் காப்பீட்டு திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு காப்பீட்டு தொகையாக ரூ.6,593 கோடி பெற்று தரப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 452 விவசாயிகளுக்கு ரூ.656 கோடி பயிர்க்காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்பட்டது. முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு எக்டேருக்கு ரூ.1 லட்சத்து 92 ஆயிரமும், மறுசீரமைப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து எக்டேருக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரமும் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. விவசாயிகள், மாணவர்கள், பெண்களுக்காக பாடும்படும் தமிழகஅரசுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், கோவிந்தராசு, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் மோகன், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story