வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அரசு முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் பேச்சு
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் பேசினார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராமன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், குடிமராமத்து திட்டம், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், சாலை வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை, நீர் மேலாண்மை, பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அனைத்து துறைகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு முதன்மை செயலாளருமான முகமது நசிமுதீன் கலந்து கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை சேலம் மாவட்டத்தில் முழுமையாக நிறைவேற்றி கடைகோடி மக்களுக்கும் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் அரசு அலுவலர்களின் பணி முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் சேலம் மாவட்டம் முழுவதும் நிறைவேற்றப்பட்டு வருகின்றதா? என்பது குறித்து பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன்.
அரசுத்துறை அலுவலர்கள் தங்களது துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதி மேம்பாட்டுப்பணிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்து அவற்றின் பயன்பாட்டை முழுவதும் தடை செய்வதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவிட வேண்டும்.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் தடைசெய்வதோடு, பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை கண்டறிந்து தடைசெய்ய வேண்டும். மேலும், பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள் அல்லது அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக பிளாஸ்டிக் இருப்பு வைத்துள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட வேண்டும். சுகாதாரத்துறை, ஊரக, நகர்ப்புற, உள்ளாட்சி துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகளில் ஊழியர்கள் துரிதமாக மேற்கொள்வதோடு பொது மக்களுக்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பிறநோய்கள் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை நிறைவேற்றிட அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு முகமது நசிமுதீன் கூறினார்.
கூட்டத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story