மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் - கலெக்டர் ராமன் வெளியிட்டார்
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டார்.
சேலம்,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ராமன் வெளியிட்டார். அதை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 982 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 53 ஆயிரத்து 847 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 49 பேர் (திருநங்கைகள்) என மொத்தம் 6 லட்சத்து 96 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், நரசிங்கபுரம் ஆகிய 4 நகராட்சிகளில் 80 ஆயிரத்து 160 ஆண் வாக்காளர்களும், 84 ஆயிரத்து 739 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 3 பேர் என மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 902 வாக்காளர்கள் உள்ளனர்.
33 பேரூராட்சிகளில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 745 வாக்காளர்களும், 20 ஊராட்சி ஒன்றியங்களில் 16 லட்சத்து 47 ஆயிரத்து 82 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 11 சட்டசபை தொகுதிகளில் 14 லட்சத்து 46 ஆயிரத்து 720 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 46 ஆயிரத்து 474 பெண் வாக்காளர்களும், 113 இதர வாக்காளர்களும் என மொத்தம் 28 லட்சத்து 93 ஆயிரத்து 307 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 4,166 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்கு எத்தனை வாக்குச்சாவடிகள் அமைப்பது? என்பது குறித்து விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி அதில் முடிவு செய்து அறிவிக்கப்படும். அதேசமயம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை புதிதாக சேர்த்தல், இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். உள்ளாட்சி தேர்தலை நடத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கிராம ஊராட்சிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் ஓட்டுப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த பேட்டியின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி முருகன், மாவட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story