சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் - எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேட்டி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்ட குறைபாடுகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொரு மனுவையும் அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது துறை வாரியாக பிரித்து தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி உள்பட பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதில், தகுதிவாய்ந்த 1026 மனுக்களை பதிவு செய்து அதனை கலெக்டரிடம் கொடுத்துள்ளேன். சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என கலெக்டர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
அதேபோல், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தபோது, நோயாளிகளுக்கும், அவர்களை பார்க்க வரும் உறவினர்களுக்கும் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை என்பது தெரியவந்தது. குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் பழுதடைந்து இருப்பதால் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். சேலம் உள்பட 6 மாவட்டங்களில் இருந்து தினமும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதி செய்து தராமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.
இது தவிர, டாக்டர்கள், நர்சுகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அவற்றை சீர் செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கூறினார்.
Related Tags :
Next Story