விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும், என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆத்தூர்,
தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஈரோட்டில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பணிக்காக சென்றார். வழியில் ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற வெள்ளை பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டம் தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கும் பணிக்காக ஓய்வுபெற்ற துணைவேந்தர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த குழு அங்கேயே தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு பணிகளை செய்து வருவார்கள். இந்த கால்நடை பூங்காவில் கால்நடை துறைக்கென பல்வேறு திட்டங்கள் உள்ளன.
இதையொட்டி முதல் கட்டமாக ரூ.50 கோடி செலவில் ஹேட்ச்சரீஸ் (குஞ்சு பொரிப்பகங்கள்) அமைக்கப்பட்டு தரமான தீவனங்கள் தயாரிக்கப்படும். இந்த தீவனங்கள் பசு மாடு உணவுக்காக தயாரிக்கப்படும். மாடுகள் இதனை உட்கொள்வதன் மூலம் தரமான பால் கிடைக்கும். சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாகும் கால்நடை பூங்காவிற்கு தற்போது முதல் கட்டமாக ரூ.500 கோடி செலவில் பணிகள் ஆரம்பமாக உள்ளது.
சேலம் மாவட்டத்திலேயே முதல் முறையாக தலைவாசல் கால்நடை பூங்கா பகுதியில் கால்நடை மருத்துவக்கல்லூரி விரைவில் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைப்பார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இடைத்தேர்தல் பணிக்காக இப்போது சென்று கொண்டிருக்கிறேன். இந்த தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி எம்.பி., இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. பண பலத்தால் தான் வெற்றி பெறுவதாக கூறினார். தி.மு.க. ஆட்சியின்போது நடந்த இடைத்தேர்தல்களில் தி.மு.க. இப்படித்தான் வெற்றி பெற்றதா? என்பதை கனிமொழி விளக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். அப்போது நகர செயலாளர் மோகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story