மாவட்டத்தில் கிராம உதவியாளர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தில் கிராம உதவியாளர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2019 10:30 PM GMT (Updated: 4 Oct 2019 9:41 PM GMT)

கிராம உதவியாளர் படுகொலையை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேன்கனிக்கோட்டை, 

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் கிராம உதவியாளர் ராதாகிரு‌‌ஷ்ணன் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை கண்டித்து தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க தேன்கனிக்கோட்டை வட்ட கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட இணை செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சின்னசாமி, வட்ட தலைவர் சூடப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முனிமாரப்பன், பொருளாளர் நீலகண்டன், கிராம நிர்வாக முன்னேற்ற சங்க வட்ட செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கிராம உதவியாளர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதே போல தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கிரு‌‌ஷ்ணகிரி வட்ட கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் கிரு‌‌ஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. வட்ட தலைவர் நேரு தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார். வட்ட துணை தலைவர் தருமசிங், அமைப்பாளர் வாசுகி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜே‌‌ஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் லட்சுமணன் கோரிக்கைகள் தொடர்பாக பேசினார். மாவட்ட துணை செயலாளர் விஜயலட்சுமி விளக்கவுரையாற்றினார். வட்ட பொருளாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

இதில் கொலை செய்யப்பட்ட கிராம உதவியாளர் ராதாகிரு‌‌ஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். கொலையாளிகள் ஜாமீனில் வெளியே வராதவாறு குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஓசூர் மற்றும் சூளகிரியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஓசூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதேபோல் சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story