காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் தடை


காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் தடை
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 4 Oct 2019 9:41 PM GMT)

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தநிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக பரிசல்கள் காவிரி கரையோரம் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். மேலும் அருவிக்கு செல்லும் நுழைவுவாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர்.

Next Story