வாழை மரம் கட்டி ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆயுத பூஜை கொண்டாடிய பயணிகள்


வாழை மரம் கட்டி ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆயுத பூஜை கொண்டாடிய பயணிகள்
x
தினத்தந்தி 4 Oct 2019 9:30 PM GMT (Updated: 4 Oct 2019 9:41 PM GMT)

ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாழை மரம் கட்டி அலங்கரித்து ஆயுதபூஜையை பயணிகள் கொண்டாடினர்.

பனப்பாக்கம், 

அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து பாணாவரம், காவேரிப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் சென்னைக்கு சென்று வருகின்றனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இவர்கள் காலையில் செல்வது வழக்கம். இந்த நிலையில் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைய வேண்டி ரெயிலில் ஆயுத பூஜை செய்ய முடிவு செய்தனர்.

ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சோளிங்கபுரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ஆயுதபூஜைக்கான பொருட்களுடன் தயாராக இருந்த பயணிகள் ரெயில் பெட்டி வாசலில் வாழை மரங்களை கட்டினர்.

மேலும் ரெயில் பெட்டிக்குள் வண்ண காகிதங்களால் அலங்காரம் செய்தனர். ரெயில் பெட்டியில் உள்ள இருக்கைகள் உள்பட அனைத்தையும் சுத்தம் செய்து அதில் சாமி படம் வைத்து பொரி, கடலை, இனிப்பு உள்ளிட்டவற்றை படையலாக வைத்தனர். தொடர்ந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். இதில் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பூஜை முடிந்தவுடன் ரெயில் பயணிகளுக்கு பொரி, கடலை, இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் ரெயில் பெட்டியை சுற்றி தேங்காய் உடைத்தனர். அதன்பின்னர் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், காவேரிப்பாக்கம், பாணாவரம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாங்கள் தினமும் இந்த ரெயிலில் சென்னைக்கு சென்று வருகிறோம். எங்களுடைய பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ரெயிலில் ஆயுத பூஜை செய்து வழிபட்டோம் என்றனர்.

இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story