சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி நவம்பர் மாதம் முடிவடையும் - ஆலோசனை கூட்டத்தில் தகவல்


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி நவம்பர் மாதம் முடிவடையும் - ஆலோசனை கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2019 3:15 AM IST (Updated: 5 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி நவம்பர் மாதம் முடிவடையும் என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சோளிங்கர், 

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் கமிட்டி ஆலோசனை கூட்டம் கோவிலில் நடைபெற்றது. கோவில் கமிட்டி தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார். கமிட்டி செயலாளரும், கோவில் செயல் அலுவலருமான மோகனசுந்தரம், சோளிங்கர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலை மேம்படுத்தவும், சிறுவர் பூங்கா, உணவு விடுதி, டிக்கெட் கவுண்ட்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு குடியிருப்பு, பக்தர்கள் காத்திருப்பு வளாகம், கழிவறைகள், பெரிய மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் பணி நடக்கும் வளாகம் வரை சாலை அமைத்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கோவிலை சுற்றி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல், வாகன நிறுத்துமிடம், உயர் கோபுர மின் விளக்கு அமைத்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல், ரோப்கார் அமைக்கும் பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்தல், சோலார் மின்விளக்கு அமைத்தல், கோவில் அடிவாரத்தில் உள்ள குளத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்வது, பாதுகாப்பு வசதிக்காக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ரோப்கார் அமைக்கும் பணி வரும் நவம்பர் மாதம் முடிவடையும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதில் கோவில் கண்காணிப்பாளர்கள் விஜயன், அமுதா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏ.எல்.விஜயன், நிர்வாகிகள் கிஷோர், பெருமாள், அருணகிரி மற்றும் கோவில் ஊழியர்கள், ரோப்கார் கட்டுமான பணி மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story