அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதால் கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குளிக்க வேண்டாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை


அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதால்  கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் குளிக்க வேண்டாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2019 3:19 AM IST (Updated: 5 Oct 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணா நதிநீர் கால்வாய் குளிக்கும் பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பதால், கால்வாயில் யாரும் குளிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீீர் வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையில் முதலில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். பின்னர் நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கிருஷ்ணாநதி கால்வாயில் கரை புரண்டு பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை உள்ள தூரம் 177 கிலோ மீட்டர் ஆகும். இந்நிலையில் இந்த தண்ணீர் கடந்து வரும் கால்வாய் பகுதியில் பொதுமக்கள் கடந்து செல்ல வசதியாக 350-க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன.

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்டிலிருந்து, பூண்டி ஏரி வரை உள்ள பகுதியில் 89 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீர் வரத்துள்ள காலங்களில் இந்த கால்வாயில் குளித்து மகிழ்கின்றனர். இவ்வாறு பொதுமக்கள் கால்வாயில் குளிக்கும்போது அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது.

கிருஷ்ணாநதி நீர் கால்வாயில் தற்போது சராசரியாக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி 1996 முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த 23 வருடங்களில் கிருஷ்ணா கால்வாயில் குளித்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 132 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 29 பேர் வரை உயிர் இழந்துள்ளனர்.

எனவே இது போன்ற உயிர் இழப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் செல்லும் பகுதிகளில் வழிநெடுகிலும் கால்வாயில் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை பலகைகளை அமைத்துள்ளனர். இதையும் மீறி சிலர் கால்வாயில் குளிக்கும்போது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழக்கின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும், அதையும் மீறி கால்வாயில் குளிக்கும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Next Story