திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் சம்பள உயர்வுக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிதண்ணீர் திறப்பாளர்கள் நேற்று காலை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ராஜு, துணைச் செயலாளர்கள் பாண்டியன், சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொன்கிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10,000, மேல்நிலை நீர்த்தொட்டி குடிதண்ணீர் திறக்கும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.13,000 என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளபடியே வழங்க வேண்டும்.7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அரசின் கொள்கைக்கு ஏற்ப கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து 2 மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story