தேர்தல் முடிவு எதுவானாலும் மக்களின் தீர்ப்பை ஏற்போம் - கண்ணன் சொல்கிறார்


தேர்தல் முடிவு எதுவானாலும் மக்களின் தீர்ப்பை ஏற்போம் - கண்ணன் சொல்கிறார்
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முடிவு எதுவானாலும் மக்களின் தீர்ப்பை ஏற்போம் என்று மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கண்ணன் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் தலைமையில் அந்த கட்சியின் வேட்பாளர் வெற்றிசெல்வம் மற்றும் ஆதரவாளர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் கொடியை கண்ணன் அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து காமராஜ் நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை அவர்கள் தொடங்கினர்.

அப்போது கண்ணன் பேசியதாவது:-

இந்த தேர்தல் ஆரோக்கியமான போட்டியாக இருக்காது. தேர்தல் முடிவு எதுவானாலும் மக்களின் தீர்ப்பை ஏற்போம். மத்தியில் ஆளும் மோடி அரசு மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதே சமயத்தில் சில தவறுகளை செய்துள்ளது. புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பிற கட்சியை குறை சொல்ல தகுதியில்லை. அதற்காக என்னை கவர்னரின் ஆதரவாளர் என்று கருத வேண்டாம்.

இலவச அரிசி விவகாரத்தில் அரிசியோ பணமோ எதுவானாலும் மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் மக்களின் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். வியாபாரத்தை மேம்பட செய்ய நடவடிக்கை எடுப்போம். லஞ்சமில்லாத நல்லாட்சி வழங்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story