சரக்கு, சேவை வரி பிரச்சினையில் நாராயணசாமி இரட்டை வேடம் போடுகிறார் - பா.ஜனதா கட்சி குற்றச்சாட்டு


சரக்கு, சேவை வரி பிரச்சினையில் நாராயணசாமி இரட்டை வேடம் போடுகிறார் - பா.ஜனதா கட்சி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Oct 2019 11:15 PM GMT (Updated: 4 Oct 2019 11:10 PM GMT)

சரக்கு மற்றும் சேவை வரி பிரச்சினையில் முதல் - அமைச்சர் நாராயணசாமி இரட்டை வேடம் போடுகிறார் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமி நாதன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

பா.ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-

இந்தி மொழி பிரச்சினையில் பா.ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குறை கூறியுள்ளார். மொழி பிரச்சினையை முன்வைத்து இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு இல்லை. மொழியால், மதத்தால், ஜாதியால் பிரிவினைவாதம் செய்து அரசியலுக்கு வந்தவர்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள். பாரத நாட்டின் பல்வேறு கலாசாரம், மாநில மொழிகளை அழியாமல் காப்பது பா.ஜ.க.வின் சித்தாந்தமாகும்.

50 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் எந்த ஒரு பிரதமரும் நாடாளுமன்றத்தில் தமிழிலோ, தமிழ்மொழியை பற்றியோ பேசியது இல்லை. ஆனால் தற்போது பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலும், பல்வேறு நாடுகளில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும், ஐ.நா.சபை நிகழ்ச்சியிலும், குடியரசு தின நிகழ்ச்சியிலும் தமிழ் மொழியின் தொன்மைகளை மேற்கோள்காட்டி, அதன் பெருமையை பேசி தமிழ் மொழியை ஆதரிக்கிறார். எனவே பா.ஜ.க.வினர் தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் என்று பேசுவதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எந்தவித தகுதியும் இல்லை. பா.ஜ.க. இந்தி மொழியை ஆதரிப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டாகும்.

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதால் புதுவை மாநிலத்தில் வருமானம் அதிகரித்துள்ளது என்று சட்டமன்றத்தில் பேசிய முதல்-அமைச்சர், டெல்லியில் சென்று சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிராக பேசி இரட்டை வேடம் போடுகிறார். இந்திய நாட்டில் வேலையின்மையை பற்றி பேசுகிறார். தேர்தல் வாக்குறுதியில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்று கூறியவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமி பா.ஜனதாவை பற்றி குறைகூறுவதை நிறுத்திவிட்டு புதுச்சேரி மாநில முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story