டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது கலெக்டர் ஆனந்த் பேச்சு


டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது கலெக்டர் ஆனந்த் பேச்சு
x
தினத்தந்தி 6 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஆனந்த் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- ஏடிஸ், எஜிப்டி என்ற வகை கொசுவின் மூலமே டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாகும். இதற்காக ஊரகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பொருட்டு 28 குறு வட்டங்கள் அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினசரி காலை 7 மணிக்கு டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொள்வார்கள்.

டெங்கு காய்ச்சல்

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று ரத்தப் பரிசோதனையும், சிகிச்சையும் பெற்று கொள்ள வேண்டும். காய்ச்சல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகிறது.இவ்வாறு கலெக்டர் கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், சுகாதார இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story