மாணவ- மாணவிகள் விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்ய அரசு உதவும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


மாணவ- மாணவிகள் விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்ய அரசு உதவும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 5 Oct 2019 11:15 PM GMT (Updated: 5 Oct 2019 5:30 PM GMT)

மாணவ-மாணவிகள் விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்ய அரசு உதவும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து உலக விண்வெளி வார விழாவை 3 நாட்கள் நடத்துகிறது.

இதன் தொடக்க விழா நேற்று கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் தியாகராசு வரவேற்று பேசினார். ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி மையத்தின் இயக்குனர் ராஜராஜன் விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு விண்வெளி கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இக்கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை, இஸ்ரோ விண்வெளி மையம் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகிறது. இதில் பங்கேற்று ஒவ்வொரு மாணவ, மாணவியும் விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்பதே நோக்கமாகும். தமிழ்நாட்டில் படிக்கும் மாணவ-மாணவிகளை விஞ்ஞான உலகத்திற்கு அழைத்துச் செல்ல 1,000 அரசு பள்ளிக்கூடங்களில் தலா ரூ.20 லட்சம் செலவில் அடல் டிங்கர் லேப் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போன்று மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகிய தமிழர்கள் இஸ்ரோவில் விஞ்ஞானிகளாக பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. மாணவ-மாணவிகள் விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்ய இந்த அரசு எப்போதும் தேவையான உதவி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் கருப்பணன் பேசும் போது, ‘உலகத்திலேயே விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தான் சிறந்து விளங்குகிறது. அதில் தமிழர்கள் விஞ்ஞானிகளாக இருப்பது பெருமைக்குரியது’ என்றார்.

பின்னர், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் கேரளா கவர்னருமான சதாசிவம் பேசியதாவது:-

இந்தியாவில் 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமானது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை. இதற்காக விஞ்ஞானிகள் யாரும் மனம் தளர வேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி ஆறுதல் கூறிச் சென்றார். நான் 23 ஆண்டுகள் வக்கீலாகவும், 19 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி, பின்னர், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பதவி வகித்தேன்.

நான் அரசு பள்ளியில் படித்துதான் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். என்னை தமிழ்நாட்டில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு நீதிபதியாக மாற்றினார்கள். எனக்கு இந்தி மொழி தெரியாமல் இருந்த போதிலும் நான் உடனடியாக அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். மாணவர்கள் படிக்கும்போதே நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் எதிர்காலத்தில் விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகளாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடும், குறிக்கோளோடும் படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விண்வெளி கண்காட்சியை ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் இ.எம்.ஆர்.ராஜா (அந்தியூர்), எஸ்.ஈஸ்வரன் (பவானிசாகர்), விண்வெளித்துறை விஞ்ஞானிகள் செந்தில்குமார், துணை இயக்குநர் வெங்கட்ராமன், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கோபி கலை அறிவியல் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் கருப்பண்ணன், செயலர் தரணீதரன், கல்லூரி டீன் செல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விண்வெளி விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

Next Story