சேலம் அருகே, கள்ளக்காதலி வீட்டிற்கு சென்ற ரவுடி மர்மசாவு - தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்


சேலம் அருகே, கள்ளக்காதலி வீட்டிற்கு சென்ற ரவுடி மர்மசாவு - தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM IST (Updated: 5 Oct 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே கள்ளக் காதலி வீட்டிற்கு சென்ற பிரபல ரவுடி, தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரெயில் மோதி இறந்தாரா? என மர்மம் நீடித்து வருகிறது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம், 

சேலம் உடையாப்பட்டி அருகே அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 30). இவருக்கு மனோரஞ்சிதம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சரத்குமார் ஆரம்பத்தில் மரம் வெட்டும் கூலி வேலைக்கு சென்று வந்தார். ஆனால் போதிய வருமானம் கிடைக்காததால் குற்றச்செயல்களில் ஈடுபட்டார். அவர் மீது வழிப்பறி, திருநங்கை கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் அவரது பெயர் ரவுடி பட்டியலிலும் உள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை அதிகாரிப்பட்டி ரெயில் தண்டவாளத்தின் கீழ் பலத்த காயங்களுடன் சரத்குமார் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சரத்குமார் கொலை செய்யப்பட்டு அவரது உடலை யாரோ மர்ம நபர்கள் தண்டவாளத்தில் வீசி சென்றதாக தகவல் பரவியது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே சரத்குமாரின் மனைவி மற்றும் உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சரத்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது, தனது கணவரை யாரோ கொலை செய்துவிட்டதாக சரத்குமாரின் மனைவி மனோரஞ்சிதம் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் போலீசார் சந்தேக மரணமாக கருதி உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது ஒருபுறம் இருக்க, ரவுடி சரத்குமார், ரெயிலில் அடிப்பட்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாரிப்பட்டி ரயில்வே கேட்டை கடந்து சென்றது. அப்போது, அந்த ரெயிலின் டிரைவர் ஏத்தாப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு, உடையாப்பட்டி அருகே ஒருவர் ரெயிலில் அடிபட்டு விழுந்து விட்டதாக தகவலை தெரிவித்தார். இதனால் ரவுடி சரத்குமார் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதேசமயம், சரத்குமார் இறந்து கிடந்த ரெயில் தண்டவாளத்தின் அருகே அப்பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களுக்குள் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த பெண் சரத்குமாருக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து சரத்குமார் தனது கள்ளக்காதலியின் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது, கடைக்கு சென்று விட்டு வருவதாக அந்த பெண்ணிடம் தெரிவித்து சென்றவர், அதன்பிறகு வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சரத்குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் தான், தண்டவாளத்தில் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இருப்பினும், ரெயிலில் அடிபட்டு அவர் இறந்தாரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்து அவரது உடலை தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்று மர்மம் நீடித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story