மாவட்ட செய்திகள்

தஞ்சை அருங்காட்சியகத்தில் 69 ஆண்டுகளாக இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஐம்பொன்சிலைகள் மீட்பு + "||" + 69 in the Tanjore Museum Recovery of 2 Imbonsils worth billions of rupees over the years

தஞ்சை அருங்காட்சியகத்தில் 69 ஆண்டுகளாக இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஐம்பொன்சிலைகள் மீட்பு

தஞ்சை அருங்காட்சியகத்தில் 69 ஆண்டுகளாக இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஐம்பொன்சிலைகள் மீட்பு
தஞ்சை பெரியகோவிலுக்கு சொந்தமான 2 ஐம்பொன் சிலைகள் தஞ்சை அருங்காட்சியகத்தில் 69 ஆண்டுகளாக இருந்தது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள அந்த 2 ஐம்பொன் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர்.
தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து விட்டது. ராஜராஜ சோழன் 35 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளான். ராஜராஜ சோழனின் 25-வது ஆட்சியாண்டில் 275-வது நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக தஞ்சை பெரிய கோவில் அர்ப்பணிக்கப்பட்டது.


இந்த கோவிலுக்கு அவருடைய 66 தெய்வ திருமேனிகள் கொடையாக வழங்கப்பட்டன. மேலும் ஏராளமான ஏக்கர் நிலங்கள், எண்ணிலடங்காத ஆபரணங்களும் கொடுக்கப்பட்டு அவை கோவிலின் விமானத்திலேயே கல்வெட்டுகளால் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வாறு கொடுக்கப்பட்ட பல்வேறு சிலைகள் காணாமல் போயின.

இது குறித்து முன்னாள் எம்.பி.சுவாமிநாதன் புகார் அளித்தார். அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த ஆண்டு ராஜராஜ சோழன் சிலை மற்றும் அவருடைய பட்டத்து இளவரசியான லோகமாதேவி சிலை ஆகியவற்றை மீட்டு பெரியகோவிலில் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த சிலைகள் திருட்டில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியும், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான ராஜாராம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இந்த கோவிலில் இருந்த மேலும் 2 சிலைகள் மாயமானது குறித்தும் விசாரணை நடத்தினார். அப்போது அந்த சிலைகள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு கலைக்கூடத்தில் இருப்பது தெரிய வந்தது. இந்த சிலைகள் மாயமானது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் வழக்கும் உள்ளது.

அதன் பேரில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்திற்கு வந்தனர். அதன்படி மதியம் 1 முதல் 2.45 மணி வரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கலைக்கூடத்தின் கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனை செய்தனர். பின்னர் அந்த 2 ஐம்பொன் சிலைகள் குறித்து அங்கிருந்த கலைக்கூடத்தின் காப்பாட்சியர் சிவக்குமாரிடம் தெரிவித்தனர். அந்த சிலைகளை எடுத்துச்செல்ல காப்பாட்சியர் சம்மதித்தார்.

இதையடுத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 91 செ.மீ. உயரம் உள்ள 56¾ கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன திரிபுராந்தகர் சிலை மற்றும் 60¾ கிலோ எடை கொண்ட தஞ்சை அழகர் என்ற வீணாதரதட்சிணாமூர்த்தி ஆகிய 2 சிவன் சிலைகளையும் மீட்டனர். இதில் தஞ்சை அழகர் சிலையை ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன்மாதேவி செய்து வழங்கினார்.

மீட்கப்பட்ட சிலைகளை திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சிலைகளை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் வருகிற 9-ந் தேதி ஒப்படைத்து(புதன்கிழமை) விசாரணைக்குப்பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் ஒப்படைக்க உள்ளனர். 69 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலைகள் தஞ்சை கலைக்கூடத்திற்கு வந்துள்ளன. எனவே இந்த சிலைகள் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போயிருக்கலாம் என கூறப்படுகிறது.

மதியம் 1 முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை என்பதால் அந்த நேரத்தில் கலைக்கூடத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. அந்த நேரத்தில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனை முடிய 1¾ மணி நேரம் ஆகி விட்டது. ஆனால் பார்வையாளர்கள் வழக்கம்போல் கலைக்கூடத்தை பார்வையிடுவதற்காக 2 மணிக்கு கலைக்கூடம் அருகே வந்தனர். ஆனால் அவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

போலீசார் சிலைகளை எடுத்துச்சென்ற பின்னர் மதியம் 3 மணிக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் கலைக் கூடத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது
சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலி கொண்டு கட்டி வைத்திருந்த 73 பேர் மீட்பு
தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலி கொண்டு கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
3. பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் செத்தது 2 மான்கள் உயிருடன் மீட்பு
பர்கூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் செத்தது. 2 மான்கள் உயிருடன் மீட்கப்பட்டன.
4. திருப்பூரில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணம் மீட்பு
திருப்பூரில் காட்டுப்பகுதியில் வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.