வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தாமதத்துக்கு முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் தான் காரணம் பா.ஜனதா மாநில தலைவர் குற்றச்சாட்டு
முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகளால் தான் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டது என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகளால் தான் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள காலதாமதம் ஏற்பட்டது என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல
மாநிலத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1,200 கோடியை இடைக்கால நிதியாக வழங்கி உள்ளது. நமது மாநிலத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க காலதாமதம் செய்யவில்லை. கர்நாடகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்காமல் இருந்தது. மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட உடனே தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பியதுடன், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி இருந்தது. மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்றிருந்தனர்.
மத்திய குழுவையும் கர்நாடகத்திற்கு அனுப்பி வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய குழு அளித்த அறிக்கையின்படி தேசிய பேரிடர் நிதியில் இருந்து வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள கர்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ.1,200 கோடியை இடைக்கால நிதியாக வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசு மீது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல.
கஜானாவை காலி செய்துவிட்டதால்...
வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள காலதாமதம் ஆவதற்கு இதற்கு முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகளே காரணம். முந்தைய ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டு கஜானாவை முழுமையாக காலி செய்துவிட்டதால் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள பா.ஜனதா அரசுக்கு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. முந்தைய ஆட்சியில் காலியான கஜானாவை நிரப்ப முதல்-மந்திரி எடியூரப்பா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக ரூ.3 ஆயிரம் கோடியை முதல்-மந்திரி எடியூரப்பா ஒதுக்கியுள்ளார். கர்நாடகத்தில் முதல் முறையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் கட்டி கொள்ள தலா ரூ.5 லட்சம் பரிகாரம் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு எந்த அரசும் இதுபோன்று பரிகாரம் வழங்கியதில்லை.
கட்டுப்பாடுகளை மீறக்கூடாது
எல்லாவற்றுக்கும் மேலாக எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு, மழை, வெள்ளத்தால் நிலங்களை இழந்தவர்களுக்கு, நிலம் வழங்குவதற்கும் முடிவு எடுத்துள்ளது. இதற்காக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து நிலங்களை இழந்தவர்களுக்கு, நிலம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் நடக்கிறது. இதனால் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கோபத்தில் பேசுகின்றனர். அரசு மீது குற்றச்சாட்டு கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆனால் கட்சியின் கட்டுப்பாடுகளை யாரும் மீறக்கூடாது. கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதால் தான் பசவனகவுடா பட்டீல் எத்னால் எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. நான் மாநில தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story