பராமரிப்பு பணி நிறைவு: பழனி முருகன் கோவில் ரோப்கார் சோதனை ஓட்டம்


பராமரிப்பு பணி நிறைவு: பழனி முருகன் கோவில் ரோப்கார் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2019 3:00 AM IST (Updated: 6 Oct 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவில் ரோப்காரில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

பழனி, 

அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன. அதேபோல் பக்தர்களின் நலனுக்காக மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப்காரில் தினசரி, மாதம் மற்றும் ஆண்டு பராமரிப்பு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரோப்காரில் உள்ள பற்சக்கரங்கள், ரோப், பெட்டிகள், எந்திரங்கள் உள்ளிட்டவை கழற்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 45 நாட்களில் பராமரிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், ரோப்காரின் முக்கிய எந்திரமான ‘சாப்ட்’ மும்பையில் வர தாமதமானது. பின்னர் வந்த ‘சாப்ட்’டில் உறுதி தன்மை இல்லாததால், கோவையில் இருந்து புதிய ‘சாப்ட்’கள் வாங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ‘சாப்ட்’கள், பெட்டிகள், ரோப் ஆகியவை பொருத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. இதைத்தொடர்ந்து நேற்று ரோப்காரின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் தக்காரும், செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார், ரோப்கார் வல்லுனர்கள் ரங்கசாமி, பாலமுருகன், செயற்பொறியாளர்கள் நாச்சிமுத்து, குமார் ஆகியோர் ரோப்காரின் பெட்டிகள், ரோப்பின் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

பின்னர் ரோப்காரில் உள்ள 8 பெட்டிகளில் தலா 250 கிலோ வரையிலான கற்கள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறுகையில், ரோப்கார் சோதனை ஓட்டம் முழுமையாக நிறைவடைந்தவுடன் பக்தர்களின் பயன்பாட்டுக்காக ரோப்கார் சேவை தொடங்கும் என்றார்.

Next Story