தூத்துக்குடி அருகே துணிகரம்: தாசில்தார் வீட்டில் ரூ.4¼ லட்சம் நகை-பணம் கொள்ளை


தூத்துக்குடி அருகே துணிகரம்: தாசில்தார் வீட்டில் ரூ.4¼ லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 6 Oct 2019 3:15 AM IST (Updated: 6 Oct 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே தாசில்தார் வீட்டில் ரூ.4¼ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ரகு (வயது 43). இவர் ஓட்டப்பிடாரம் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சங்கரி. இவர் மறவன்மடத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் 2 பேரும் தங்களது தாயார் பணியாற்றி வரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் காலையில் சங்கரி தனது குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்று விட்டார். பின்னர் ரகு வீட்டை பூட்டி விட்டு அலுவலகத்துக்கு சென்றார்.

மாலை 5 மணியளவில் சங்கரி தனது குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். அப்போது வீ்ட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், கம்மல் என 18 பவுன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.4¼ லட்சம் ஆகும்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசில் தாசில்தார் ரகு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். தாசில்தார் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி பகுதியை சேர்ந்த சண்முகராஜா வீட்டிலும், புதுக்கோட்டை பொன்ராஜ்நகரை சேர்ந்த மாணிக்கம் வீட்டிலும் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து உள்ளனர். ஆனால் அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்தும் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாசில்தார் வீட்டில் கதவை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்ததும், 2 வீடுகளில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story