தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அமைச்சர்களிடம் எந்த திட்டமும் இல்லை: சஞ்சய்தத் குற்றச்சாட்டு


தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அமைச்சர்களிடம் எந்த திட்டமும் இல்லை: சஞ்சய்தத் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Oct 2019 4:00 AM IST (Updated: 6 Oct 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

“தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அமைச்சர்களிடம் எந்த திட்டமும் இல்லை“ என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் குற்றம் சாட்டினார்.

நெல்லை, 

நெல்லையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய்தத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதி மக்களை நான் சந்தித்து வருகிறேன். அவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளனர். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அமோக வெற்றி பெறுவார். ஆளுங்கட்சியினர் பணத்தை வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். இங்கு 15 அமைச்சர்கள் வந்து தேர்தல் பணியாற்றுகிறார்கள். ஆனால், மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் இந்த அரசு செய்யவில்லை.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அமைச்சர்களிடம் எந்த திட்டமும் இல்லை. மத்திய அரசின் பிரதிநிதியாக தமிழக அரசு செயல்படுகிறது. மோடி சொல்வதை தான் இவர்கள் செய்கிறார்கள். அவரின் முகமூடியாக இருந்து செயல்படுகிறார்கள். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று பாளையங்கோட்டையில் நடந்த சமத்துவ மக்கள் கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணனிடம் ஆதரவு கேட்டார். அதன்பிறகு நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது ஊமையாக இருந்த அமைச்சர்கள், அவரது மறைவுக்கு பிறகு என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் இஷ்டப்படி பேசி வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெளியூர்க்காரர் என்று விஷம பிரசாரம் செய்கிறார்கள். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், சென்னைக்கு தொழில் செய்ய சென்று உள்ளார். அவரை வெளியூர்க்காரர் என்று பேச அ.தி.மு.க.வினருக்கு எந்த அருகதையும் இல்லை. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சொந்த ஊரில் தான் தேர்தலில் நின்றார்களா? அ.தி.மு.க.வினர் தொகுதி மாறி நிற்கவில்லையா?“ என்றார்.

Next Story