நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்


நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 6 Oct 2019 3:30 AM IST (Updated: 6 Oct 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஐ.பெரியசாமி கூறினார்.

நெல்லை, 

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை ஒன்றிய தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் ரெட்டியார்பட்டியில் நேற்று நடந்தது. தி.மு.க. மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் வசந்தகுமார், ஞானதிரவியம், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் வரவேற்று பேசினார். தி.மு.க. மாநில துணைபொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் பெறுகின்ற வெற்றி அடுத்த சட்டசபை பொதுத்தேர்தலுக்கான முதல் வெற்றிபடியாகும். இந்த இடைத்தேர்தலில் நாம் கூட்டணி கட்சிகளோடு தேர்தலை எதிர்கொள்கிறோம். மக்களை சந்தித்து நாம் செய்த சாதனைகளை எடுத்து கூறி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறோம். ஆனால் அ.தி.மு.க.வினர் மக்களை சந்திக்க முடியாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதனால் தான் அவர்கள் பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

நமது கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வேட்பாளர் ரூபி மனோகரனை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பேசுகையில், “நாங்குநேரி தொகுதிக்கு முழுமையாக என்னை ஒப்படைத்துவிட்டேன். இங்கு நான் என் வாழ்நாள் முழுவதும் இருந்து இந்த மக்களுக்காக உழைப்பேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, முதல்-அமைச்சராக்கவும் அயராது உழைப்பேன் என்பதை இந்த நேரத்தில் உறுதி கூறுகிறேன். நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன், என்னுடைய உழைப்பால் உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். இந்த தொகுதி மக்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்ற பாடுபடுவேன். மக்களின் அடிப்படை தேவைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கி தருவேன்“ என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், பழனிமாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், கீதாஜீவன், சாரங்கபாணி, செந்தில்குமார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பசாமிபாண்டியன், கிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.எம்.சிவகுமார், சங்கரபாண்டியன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் கணேசன், விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் ஐகோர்ட்டு பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான்மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்தது. இதில் மாநில வக்கீல் பிரிவு செயலாளர் கிரிராஜன், அமைப்பு செயலாளர் பாரதி, காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய்தத் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றிக்காக பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று களக்காடு யூனியனுக்கு உட்பட்ட சிங்கிகுளம், செல்வபுதுக்குளம், பெத்தானியாபுரம், மலையடி, வடவூர்பட்டி, கீழ உப்பூரணி, மேல்கரை, சடையான்குளம், ஸ்ரீகோவிந்தபேரி, ஆதிச்சபேரி, எருக்கலைபட்டி, தெற்கு எருக்கலைபட்டி, நெடுவிளை, மேல வடகரை, கீழ வடகரை, வண்டிக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றும், தெருக்களில் நடந்து சென்றும், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story