மேகமலை வனப்பகுதியில் வன விலங்குகளுக்காக சோலார் மின்மோட்டாருடன் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி


மேகமலை வனப்பகுதியில் வன விலங்குகளுக்காக சோலார் மின்மோட்டாருடன் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 6 Oct 2019 3:15 AM IST (Updated: 6 Oct 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

மேகமலை வனப்பகுதியில் வனவிலங்குகளின் பயன்பாட்டுக்காக சோலார் மின்மோட்டாருடன் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கடமலைக்குண்டு, 

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கண்டமனூர், வருசநாடு, மேகமலை ஆகிய 3 வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு வனத்துறையினர் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வனப்பகுதியில் ஏராளமான ஓடைகள் அமைந்துள்ளது. இதுதவிர வனத்துறையினர் வனப்பகுதியின் சில இடங்களில் நீர் தேங்கும் குளங்கள் அமைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லை.

இதனால் வனப்பகுதியில் உள்ள ஓடை மற்றும் குளங்கள் வறண்ட நிலையில் காணப்படுகிறது. எனவே தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியின் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறது. வறட்சியான நாட்களில் வனத்துறையினர் வனப்பகுதியில் தொட்டிகள் அமைத்து டிராக்டர், லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து நீர் நிரப்பி வைத்தும் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.

வனவிலங்குளின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வனப்பகுதியின் சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து சோலார் மின்சக்தியில் செயல்படும் தானியங்கி மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தரைமட்ட தொட்டியில் நிரப்பி வைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதுகுறித்து மேகமலை வனச்சரகர் சதீஸ்கண்ணன் கூறுகையில் ‘மேகமலை மற்றும் வருசநாடு வனச்சரகத்துக்கு உட்பட்ட 4 இடங்களில் சோலார் தகடுகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் இருக்க சோலார் தகடுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியை சுற்றிலும் பள்ளம் தோண்டப்படும். அதன்பின்னர் ஆழ்துளை கிணறு மற்றும் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்படும்.

ஆழ்துளை கிணற்றில் சோலார் மின்சக்தி மூலம் இயங்கும் தானியங்கி மோட்டார் அமைக்கப்பட உள்ளதால் தரைமட்ட தொட்டியில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதனால் வறட்சியான நாட்களில் வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்வதை தடுக்க முடியும்’ என்றார்.


Next Story