தூத்துக்குடியில் புத்தக திருவிழா தொடங்கியது


தூத்துக்குடியில் புத்தக திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 6 Oct 2019 3:30 AM IST (Updated: 6 Oct 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் சார்பில், தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இந்த புத்தக திருவிழாவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘ரிப்பன்‘ வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

தூத்துக்குடியில் 2-வது முறையாக புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை நடத்தப்படும் புத்தக திருவிழா, ஒரு மாவட்டத்தில் நடத்தப்படும் புத்தக திருவிழாவை தாண்டி, மாநிலத்தில் நடத்தப்படும் புத்தக திருவிழா போல் உள்ளது. அந்த அளவுக்கு தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு காணக்கிடைக்காத புத்தகங்கள் இங்கு இடம்பெற்று உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் பல தியாகசீலர்களை பெற்றெடுத்த மாவட்டம். அந்த பாரம்பரியத்தை காக்க வேண்டியது நமது கடமை. அந்த கடமையின் ஒரு பகுதியாக இந்த புத்தக திருவிழா இடம் பெற்றுள்ளது. எத்தனை மாற்றம் வந்தாலும் புத்தகங்கள் வாழ்ந்து கொண்டே இருக்கும். புத்தகங்களை படிப்பதன் மூலம் பெறப்படும் கருத்துகள் மனதில் ஆழமாக பதியும். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கான பல புத்தகங்கள் இந்த அரங்குகளில் இடம்பெற்று உள்ளன. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் விஷ்ணு சந்திரன், புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட் துணை இயக்குனர் (கண்காட்சி) இம்ரானுல் ஹக், செயல் உறுப்பினர் நந்தகுமார், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், செரினா பாக்கிய ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களில் இருந்து அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 1 லட்சம் தலைப்புகளில் சுமார் 10 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த புத்தக திருவிழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது. புத்தக திருவிழாவையொட்டி, தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 5 மணி முதல் 6 மணி வரை நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும், தொடர்ந்து எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


Next Story