குடிபோதையில் பொதுமக்களை தாக்கிய 4 பேர் கைது 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம்


குடிபோதையில் பொதுமக்களை தாக்கிய 4 பேர் கைது 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM IST (Updated: 6 Oct 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

புன்னம்சத்திரம் அருகே குடிபோதையில் பொதுமக்களை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 8 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது.

நொய்யல்,

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் கரூர் மெயின்ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் திருமலை. இவர் சொந்தமாக தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் சுரேந்தர் (வயது 39). இவருக்கு சொந்தமான சிமெண்டு கற்கள் தயாரிக்கும் நிறுவனம் புன்னம்சத்திரம் அருகே பாண்டிபாளையத்தில் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது இந்தநிறுவனம் பல மாதங்களாக செயல் பாடின்றி கிடக்கிறது. இந்த நிறுவனத்திற்குள் நேற்று முன்தினம் இரவு அதன் உரிமையாளர் சுரேந்தர் தனது நண்பர்களுடன் அமர்ந்து மதுகுடித்து கொண்டு கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஊர்பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு அந்த நிறுவனத்திற்கு சென்று குடிபோதையில் இருந்த சுரேந்தர் மற்றும் அவரது நண்பர்களை தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மதுபாட்டில் மற்றும் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி ஆகியவற்றை கொண்டு பொதுமக்களை சரமாரியாக தாக்கியதுடன், அவர்கள் ஓட்டி வந்த 8 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்து, கொலை மிரட்டலும் விடுத்தனர்.

5 பேர் படுகாயம்

இதில் பாண்டிபாளையத்தை சேர்ந்த நாகராஜன் மகன் நவீன்குமார்(25), செந்தில்குமார்(35), சாமிநாதன் மனைவி கமலவேணி(45), வடிவேலம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழரசன்(22), சேமங்கியை சேர்ந்த கணேசன் மகன் அரவிந்தன்(24) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்கு பதிவு செய்து, குடிபோதையில் பொதுமக்களை தாக்கிய சுரேந்தர், அவரது நண்பர்கள் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த அய்யாவு மகன் கோபிநாத்(22), பஜார் 2-வது தெருவை சேர்ந்த சேகர் மகன் சுதாகர்(19), காந்திநகரை சேர்ந்த குமார் மகன் லிங்கேஸ்வரன்(19) ஆகிய 4 பேரை கைது செய்தார். தப்பி ஓடிய மதுரையை சேர்ந்தவிக்கி, செம்படாபாளையத்தை சேர்ந்த கலை மற்றும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story