உடுமலை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி


உடுமலை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 5 Oct 2019 10:45 PM GMT (Updated: 5 Oct 2019 9:29 PM GMT)

உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தளி,

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுமட்டுமின்றி பொறுப்பாறு, தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கோடந்தூர், குருமலை, குழிப்பட்டி, ஆட்டுமலை உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளார்கள். அது தவிர மலைப்பகுதியில் இயற்கையாக விளையக்கூடிய வடுமாங்காய், நெல்லிக்காய், கடுக்காய் உள்ளிட்ட பொருட்கள் மலைவாழ் மக்களுக்கு கூடுதல் வருமானத்தை அளித்து வருகிறது.

வனப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்ற பயிர்களை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் மலைவாழ் மக்களின் விவசாய தொழில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. மேலும் உணவைத்தேடிக்கொண்டு வருகின்ற வனவிலங்குகள் மலைவாழ்மக்களை தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட குழிப்பட்டியைச் சேர்ந்த மயில்சாமி(வயது 62) என்ற தொழிலாளி விவசாய வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது புதருக்குள் நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென்று வெளியே வந்தது. இதை பார்த்ததும் மயில் சாமி தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த காட்டு யானை மயில்சாமியை பலமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து உடுமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Next Story