புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Oct 2019 3:30 AM IST (Updated: 6 Oct 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி 3-வது சனிக் கிழமையையொட்டி நாமக்கல்லில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல், 

பெருமாளுக்கு உகந்தநாள் புரட்டாசி மாத சனிக்கிழமை ஆகும். இதையொட்டி சனிக்கிழமைகளில் நாமக்கல்லில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி மல்லசமுத்திரம் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் சென்றாயபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மோகனூரில் உள்ள வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் பெருமாள் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சாமியை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

சேந்தமங்கலம் அருகே புதன்சந்தையில் பிரசித்திபெற்ற நைனாமலை கோவில் மலை உச்சியில் உள்ளது. இங்கு குவலயவல்லி தாயாருடன் வரதராஜ பெருமாள் காட்சியளிக்கிறார். புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு துளசி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மலை பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் பரமத்திவேலூரில் உள்ள கோதண்ட ராமசாமி கோவில், பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பெருமாள் கோவில்களில் சாமிக்கு பூஜைகள் நடைபெற்றன.

வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் பிரிவு சாலையில் வாமன நாராயண சாமி கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சாமிக்கு ஆறுகால பூஜைகள் நடைபெற்றது. இதில் சாமி திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து சாமியை தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story