ஏரி, குளம், குட்டைகளில் மழைநீரை சேமிக்க அனைவரும் முன்வர வேண்டும் - மத்திய அரசின் கூடுதல் செயலர் மஜ்ஹீ பேச்சு


ஏரி, குளம், குட்டைகளில் மழைநீரை சேமிக்க அனைவரும் முன்வர வேண்டும் - மத்திய அரசின் கூடுதல் செயலர் மஜ்ஹீ பேச்சு
x
தினத்தந்தி 5 Oct 2019 10:15 PM GMT (Updated: 5 Oct 2019 9:43 PM GMT)

ஏரி, குளம், குட்டைகளில் மழைநீரை சேமிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று மத்திய அரசின் கூடுதல் செயலர் மஜ்ஹீ கூறினார்.

ஊத்தங்கரை, 

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் ஜல் சக்தி அபியான் மாவட்ட அளவிலான உழவர் திருவிழாவை மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்ட துறைக்கான கூடுதல் செயலர் மஜ்ஹீ மற்றும் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்ட துறைக்கான கூடுதல் செயலர் மஜ்ஹீ பேசியதாவது:- பிரதமர் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான மத்திய, மாநில அரசுகள் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல்வேறு குழுக்களை அமைத்து இந்தியா முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மழைகாலங்களில் ஏரி, குளம், குட்டைகள் மற்றும் தங்களுடைய இல்லங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள்அமைத்து மழை நீரை சேமிக்க அனைவரும் முன் வர வேண்டும். ஜல்சக்தி அபியான் திட்டத்தின் நோக்கம் மழை நீரைசேமிப்பது, சேமித்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயத்திற்கும் குடிநீருக்கும் எதிர் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல மழை நீர் சேமிப்புக்கு முக்கியமான மரங்களை நடவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:- மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகள், 400 குளம், குட்டைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 70 சதவீத ஏரிகளில் பணிகள் முடிவடைந்துள்ளது. 33 ஏரி பாசன திட்டம் செயல்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது.

அவற்றில் குறிப்பாக ஆழியாளம், எண்ணேகொள் கால்வாய் திட்டம் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நீரினை சிக்கனமாக பயன்படுத்தி வேளாண்மை விஞ்ஞானிகள் வழங்கியுள்ள ஆலோசனையின் படி விவசாயம் செய்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ் வரவேற்றார். பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் தமிழ்செல்வன், வேளாண் பொறியாளர்கள் முகமது இஸ்மாயில், நபார்டு உதவி பொது மேலாளர் ஸ்ரீன்சலீம், வேளாண்மை இணை இயக்குனர் கலைவாணி ஆகியோர் பேசினாாகள். தொடர்ந்து மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வித்யா மந்திர்கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சாகுல்அமீது, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், ஆத்மா சேர்மன் சேட்டுகுமார், நகர செயலாளர் சிவானந்தம், ஒன்றிய விவசாய அணி வேங்கன், கூட்டுறவு சங்க தலைவர்கள் நாகராஜ், திருஞானம், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொழில் நுட்ப வல்லுனர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story