தெப்பக்குளத்தில் குப்பை கொட்டினால் நடவடிக்கை - நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
தெப்பக்குளத்தில் குப்பைக் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று பொள் ளாச்சி நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறினார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தெப்பக்குளம் தூர்வாராமல், குப்பைகள் தேங்கி கிடந்ததால், கடந்த பல ஆண்டுகளாக அங்கு நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி நீர்நிலை புனரமைப்பு குழுவினர் தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு முடிவு செய்தனர்.
இதையடுத்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். புதர்கள், கற்களை அகற்றி சமப்படுத்தினர். மேலும் அங்கிருந்த பாட்டில்களும் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தெப்பக்குளத்தை முழுமையாக தூர்வாரி புனரமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கமிஷனர் கண்ணன் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தெப்பக்குளத்தை தூர்வாரி புனரமைக்க வேண்டும். மேலும் பக்தர்கள் வசதிக்காக படிக்கட்டுகள் அமைப்பது, தெப்பக்குளத்தில் மீண்டும் குப்பைகளை கொட்டாமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது தெப்பக்குளத்தை புனரமைப்பதற்கு நகராட்சி சார்பில் நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினருக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாக குழுவை சேர்ந்த நித்தியானந்தன், நகராட்சி என்ஜினீயர் முருகேசன் மற்றும் நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் தெப்பக்குளத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது தெப்பக்குளத்தை புதுப்பொலிவுடன் மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் கூறியதாவது:-
பொள்ளாச்சியின் பாராம்பரியமான தெப்பக்குளத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினோம். அதன்படி ஒரு குழு அமைத்து வாரந்தோறும் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் வாரந்தோறும் குப்பைகள் குறையாமல், அள்ள, அள்ள வந்து கொண்டிருந்தது. இதையடுத்து தன்னார்வலர்கள் மூலம் பொக்லைன் எந்திரத்தை கொண்டு தூர்வாரும் பணிகளை செய்து வருகின்றோம்.தெப்பக்குளத்தில் உள்ள சுவர்களுக்குள் மரங்கள் ஊடுருவி பலம் இல்லாமல் இருக்கிறது. எனவே அந்த சுவர்களை இடித்து அகற்றி விட்டு, தெப்பக்குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும். அப்போது குப்பைகள் கொட்டாமலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்க முடியும். இது தவிர பக்தர்கள் வசதிக்காக தெப்பக்குளத்தில் படிக்கட்டுகள் வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறியதாவது:-
நீர்நிலைகள் புனரமைப்பு குழு சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தெப்பக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 30 அடி ஆழம் கொண்ட தெப்பக்குளத்தில் 20 அடி வரை தூர்வாரப்பட்டு உள்ளது. தற்போது தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. தெப்பக்குளத்தின் தெற்கு, மேற்கு பகுதிகளில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.30 லட்சம் வரை நிதி தேவைப்படும்.
தெப்பக்குளத்தை தூர்வாருவதற்கு இதுவரைக்கும் நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் ரூ.4 லட்சம் வரை செலவு செய்து உள்ளனர். இன்னும் ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்று தெரிகிறது. தெப்பக்குளத்தில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைகளை கொட்டாமல் தெப்பக்குளத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story