சேலம் அருகே, கலப்புத்திருமணம் செய்த நிலத்தரகர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை


சேலம் அருகே, கலப்புத்திருமணம் செய்த நிலத்தரகர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Oct 2019 11:15 PM GMT (Updated: 5 Oct 2019 9:44 PM GMT)

சேலம் அருகே கலப்புத் திருமணம் செய்த நிலத்தரகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டையாம்பட்டி, 

சேலம் தாதகாப்பட்டி கேட் சீரங்கன் தெருவை சேர்ந்த சேகர் மகன் மோகன் (வயது 28). நிலத்தரகர். இவர் ராஜ குமாரி (23) என்பவரை கடந்த 6 ஆண்டுக்கு முன்பு கலப்புத்திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகிமா, மம்தா என 2 பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் இந்த இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகன், சேலம் பைரோஜி பால்சொசைட்டி அருகில் உள்ள தார்சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாசங்கர், இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோகன் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் மோகனை கடத்திச்சென்று பின்பக்க தலையில் வெட்டிக்கொலை செய்து உடலை பால்சொசைட்டி அருகில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மோகன் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலை பார்த்து ராஜ குமாரி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மோகன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணம் கொடுக்கல், வாங்கலில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மோகன் எப்போதும் கழுத்தில் நிறைய தங்க நகைகள் அணிந்திருப்பாராம். இதனால் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? என தெரியவில்லை. ஆனால் அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் அப்படியே இருந்தது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மோகன் பிணமாக கிடந்த இடத்தின் அருகே அவரது செல்போன் இருந்தது. மேலும் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அருகே நிலத்தரகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story