காதல் தகராறில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்தினர் மீது தாக்குதல் - அண்ணன் - தம்பிகள் உள்பட 5 பேர் கைது


காதல் தகராறில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்தினர் மீது தாக்குதல் - அண்ணன் - தம்பிகள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2019 4:00 AM IST (Updated: 6 Oct 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

குண்ணங்குப்பம் கிராமத்தில் காதல் தகராறில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குடும்பத்தினரை தாக்கிய அண்ணன் - தம்பிகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழ்பென்னாத்தூர், 

கீழ்பென்னாத்தூரை அடுத்த குண்ணங்குப்பம் கிராமத்தில் உள்ள கொல்லை கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் கே.ஏழுமலை (வயது 50). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்தவர் எம்.ஏழுமலை (45). இந்த நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனும், எம்.ஏழுமலையின் மகளும் காதலித்து வந்துள்ளனர்.

இதுபற்றி குடும்பத்தினருக்கு தெரியவரவே இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் காதலித்து வந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு எம்.ஏழுமலை, அவருடைய சகோதரர்கள் நாகராஜ் (40), ஞானசேகர் (38), பாக்கியராஜ் (35) மற்றும் ஏழுமலையின் குடும்ப நண்பர் அண்ணாதுரை (40) ஆகியோர் சேர்ந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஏழுமலையை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதைப்பார்த்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மற்றொரு மகன் சுபாஷ் அங்கு வந்து தட்டிக்கேட்டார். அப்போது அவரையும், தடுக்க வந்த சுபாஷின் தாயார் ராணியையும் தாக்கினர். இதில் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எம்.ஏழுமலை, நாகராஜ், ஞானசேகர், பாக்கியராஜ், அண்ணாதுரை ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story