விருதுநகர்- சாத்தூர் இடையே நடைமேம்பாலங்கள் கட்டுவது எப்போது?


விருதுநகர்- சாத்தூர் இடையே நடைமேம்பாலங்கள் கட்டுவது எப்போது?
x
தினத்தந்தி 6 Oct 2019 3:45 AM IST (Updated: 6 Oct 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்- சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமேம்பாலங்கள் கட்ட மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர்-சாத்தூர் இடையே கலெக்டர் அலுவலக வளாகம் அருகேயும் படந்தால் விலக்கு அருகேயும் விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் நடை மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என கோரப்பட்டு வந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நடை மேம்பாலங்கள் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மேம்பாலங்கள் கட்டப்படுவதற்கான பூமி பூஜை நடைபெறுவதற்கு முன்பு அப்போதைய நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பூமி பூஜை ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் நடை மேம்பாலங்கள் கட்டுமான பணி ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலை தொடர்ந்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு சாலை போக்குவரத்துறை இணை மந்திரியாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனிடம் நடைமேம்பாலங்கள் அமைக்கப்படுவதன் அவசியம் குறித்து கூறியதன் பேரில் அவர் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளுக்கு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனாலும் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இந்த திட்டப்பணியை அப்படியே கைவிட்டு விட்டனர். இதுபற்றி விசாரித்த போது ஏற்கனவே இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அவை ரத்து செய்யப்பட்டு விட்டதால் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கூறப்பட்டது.

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த இடத்தில் வாகன விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த இடத்தில் நடைமேம்பாலங்கள் அமைக்க வேண்டியது அவசியம் ஆகும். இதே போன்று படந்தால் விலக்கு அருகேயும் வாகன விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளதால் நடைமேம்பாலம் அமைக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது. இதுபற்றி பலமுறை வலியுறுத்தி கூறிய போதிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர். மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலை உள்ளது.

எனவே மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க விருதுநகர் தொகுதி எம்.பி.மாணிக்கம் தாகூர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை சந்தித்து இது குறித்து வலியுறுத்தி மேலும் தாமதிக்காது இத்திட்டப்பணியை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாலையில் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் சேதமடைந்தும் சாலை மேடு பள்ளமாகவும் இருக்கும் நிலையில் இந்த சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story