6 மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி


6 மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM IST (Updated: 6 Oct 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

வில்லூர் கிராமத்தில் 6 மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருமங்கலம்,

கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது வில்லூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 10 வார்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 6-வது வார்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வார்டிற்கு வைகை தண்ணீர் தேவர் சிலை அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து செல்கிறது. இந்நிலையில் 6-வது வார்டு பகுதியில் உள்ள குழாய்கள் உடைந்து விட்டன. இவை சரிசெய்யப்படாமல் உள்ளதால் இப்பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை.

கடந்த 6 மாதமாக இந்த நிலை நீடிக்கிறது. பொதுமக்கள் அருகில் உள்ள 7-வது மற்றும் 8-வது வார்டுக்கு சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஊராட்சி எழுத்தர் மற்றும் அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் இதுகுறித்து கூறியதாவது:- உடைந்த குழாயை சரிசெய்ய பல முறை ஊராட்சி எழுத்தரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை சரிசெய்து தண்ணீர் விட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story