ஓமலூர், காடையாம்பட்டியில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் - கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டியில் தீவிர காய்ச்சல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
ஓமலூர்,
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மழைக்கால தீவிர காய்ச்சல் தடுப்பு, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். மேலும், தீவட்டிப்பட்டியில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மழைக்கால தீவிர காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கொசு ஒழிப்பு புகை வண்டியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முகாமில், கலெக்டர் ராமன் பேசியதாவது:-
மழைக்காலம் தொடங்கி விட்டதால் சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து பணிகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து ஊரக, நகர்புற, உள்ளாட்சி பகுதிகளிலும், மாநகர பகுதிகளிலும் நோய் தடுப்பு பணிகள் முழுமையாக நடைபெற்று வருகின்றன.
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் மழைக்கால டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார பணியாளர்கள், பராமரிப்பின்றி கிடக்கும் பழைய டயர்கள், பழைய பாத்திரங்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள், தொற்று நோய்கள் குறித்து உரிய விழிப்புணர்வை சுகாதார பணியாளர்கள் ஏற்படுத்திட வேண்டும்.
டெங்கு கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் மட்டுமே உற்பத்தி ஆகின்றது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பொருட்கள் போன்ற தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வதோடு மழை நீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், ஓமலூர் தாசில்தார் குமரன், காடையாம்பட்டி தாசில்தார் மகேஸ்வரி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story