யாருக்கு அக்கறை என்பதை மக்கள் அறிவார்கள் - ரங்கசாமி பேட்டி


யாருக்கு அக்கறை என்பதை மக்கள் அறிவார்கள் - ரங்கசாமி பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2019 11:45 PM GMT (Updated: 5 Oct 2019 11:33 PM GMT)

காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி பிருந்தாவனம், சித்தன்குடி, ஜீவா நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அவருடன் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் வாரிய தலைவர்கள் பாலமுருகன், மதி என்ற வெங்கடேசன், அ.தி.மு.க.துணை செயலாளர் கணேசன், தொகுதி செயலாளர் ஜானிபாய் உள்பட பலரும் சென்று வாக்கு சேகரித்தனர்.

வாக்குசேகரிப்பின்போது ரங்கசாமியிடம் நிருபர்கள், உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. நாற்காலி மீதுதான் ஆசை இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து ரங்கசாமி கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதி மக்கள் எங்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த தேர்தலில் எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

எனக்கு மக்கள் மீது அக்கறை உள்ளதா? இல்லையா? என்பது குறித்தும் யாருக்கு அக்கறை உள்ளது என்பதையும் புதுச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள். எனது ஆட்சிக்காலத்தில்தான் புதுச்சேரியில் மக்கள் விரும்பும் பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மாநிலம் வளர்ச்சியை அடைந்தது.

நான் கொண்டுவந்த திட்டங்களைக்கூட நிறைவேற்ற முடியாத அரசாகத்தான் இந்த அரசு உள்ளது. முதல்-அமைச்சர் பதவியை நான் புதியதாக பார்க்கப்போவது இல்லை. பல ஆண்டுகள் முதல்-அமைச்சராக மற்றும் அமைச்சராக இருந்துள்ளேன்.

மக்களுக்கு ஒரு வேலைவாய்ப்பினைகூட வழங்க முடியாத அரசாகத்தான் இந்த அரசு உள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு வேலைவாய்ப்புகூட வழங்கவில்லை. உயர்படிப்பு படித்தவர்கள் பலர் ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் அவல நிலைதான் தற்போது உள்ளது.

அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் அதிகாரம் யாருக்கு என்று சண்டைபோட்டுக்கொண்டே 3 ஆண்டுகளை ஓட்டிவிட்டார்கள். இந்த ஆட்சியாளர்கள் புதுச்சேரியில் என்ன முன்னேற்றத்தை கொண்டு வந்தனர் என்று சொல்ல தயாரா?

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜான்குமார் கடந்த 2016-ம் ஆண்டு நெல்லித்தோப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின் எம்.எல்.ஏ. பணியை தன்னால் செய்ய முடியாது என்பதால் அப்பதவியை ராஜினாமா செய்தார். அவரை ஏன் திரும்பவும் இந்த தொகுதியில் நிறுத்த வேண்டும்? அதற்கான காரணம் என்ன?

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

Next Story