பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்


பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:00 PM GMT (Updated: 6 Oct 2019 4:07 PM GMT)

பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பெரம்பலூர்,

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை வழிபாடு செய்வார்கள். இதனால் பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய பஸ்நிலையம், காமராஜர் வளைவு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை படுஜோராக நேற்று நடந்தது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

சிறிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.40-க்கும், பெரிய வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.50-க்கும், 1 லிட்டர் உலக்கு பொரி ரூ.15-க்கும், ½ லிட்டர் உலக்கு அவல் ரூ.20-க்கும், பொட்டு கடலை ½ லிட்டர் உலக்கு ரூ.40-க்கும், திருஷ்டி பூசணிக்காய் பெரியது ரூ.100-க்கும், சிறியது ரூ.40-க்கும் விற்பனையானது. 1 டஜன் வாழைப்பழங்கள் தரத்திற்கு ஏற்றாற்போல் ரூ.50-ல் இருந்து விற்கப்பட்டது. பூக்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகவே இருந்தது. செவ்வந்திப்பூ ஒரு முழம் ரூ.40-க்கும், கதம்பம் ஒரு முழம் ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.100-ல் இருந்து 160-க்கும், மாதுளை பழங்கள் கிலோ ரூ.160-ல் இருந்து 200-க்கும், ஆரஞ்சு கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.180 வரைக்கும், சாத்துக்குடி கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் அலங்கார பொருட்களின் விற்பனையும் படுஜோராகவே நடந்தது. சரஸ்வதி படங்களும் சாலையோர கடைகளில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூரில் ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க பழைய பஸ் நிலையம் அருகே கூட்டம் அதிகளவு காணப்பட்டது. முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் நேற்று முன்தினம் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.


Next Story